6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

0
154
#image_title

கோவை மாவட்டம் ஆலாந்துறையில் 6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ – ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே கவுண்டன் புதூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ ஏற்பட்டது. 10 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தீ பரவியது. வனத்தில் மூங்கில் மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், சருகுகள் போன்றவற்றின் மூலம் தீ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக பரவியது.

சுமார் 80 ஹெக்ட்டேர் பரப்பு தீயில் எரிந்து நாசமாகியதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பச்சை மரங்கள் பெரிய அளவில் எரியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ தடுப்பு கோடுகள் அமைத்தும், கிளைகளை வைத்து அடித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ரங்கசாமி கோயில் சராகம் பகுதியில் இருந்து தீயணைப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்றைய தினம் வரை சுமார் 80% தீ அணைக்கப்பட்டு விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், எளிதில் அணுக முடியாத இடங்களுக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

Previous articleபேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!
Next articleஅண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது! திமுக அமைச்சர் அதிரடி