கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூகையூர் சாலையை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). ஆயில் மில் நடத்தி வரும் இவர், சில நண்பர்களுடன் சேர்ந்து சின்னசேலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன்களை வாடகைக்கு எடுத்து வங்கியில் சுமார் ரூ.24 கோடிக்கும் மேல் கடன் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து குடோன் உரிமையாளர் ஜெயராமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையில் பெரியசாமி என்பவர் சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதியில் 36 குடோன்களை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். இதில், விவசாயிகளின் நிலக்கடலைகளை வைத்து ஆத்தூர், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் வங்கிகளில் போலி ஆவணங்களை கொடுத்து பெரியசாமி, இவரது தந்தை தங்கவேல், மனைவி தங்கம், மகன் பாலுசாமி(24), மகள் சரண்யா உள்பட மொத்தம் 46 பேரின் பெயரில் ரூ.24 கோடியே 33 லட்சத்து 64 ஆயிரத்து 251 அடமான கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பெரியசாமி, இவரது மகன் பாலுசாமி, தகரை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(36), நாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(34) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இ்ந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.