அரசு பள்ளிகளில் தேவைப்படும் மாற்றங்கள் அல்லது புகார்கள் குறித்து மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய அவர்களுக்கு இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் :-
மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறைக்கு தனியாக பட்ஜெட் போடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரையில் மாணவர்களுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும், பள்ளிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே செல்லும் பொழுது அவர்களுடன் கட்டாயமாக ஆசிரியர் ஒருவரும் செல்ல வேண்டும் என்றும், அது தனியார் பள்ளியாக இருந்தாலும் அரசு பள்ளியாக இருந்தாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்திருந்தார்.
வெளியே செல்லும் பொழுது கட்டாயமாக ஒவ்வொரு மாணவரும் பெற்றோருடைய ஒப்புதல் கடிதத்துடன் வர வேண்டும் என்றும், பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனை எந்தவித தயக்கமும் இன்றி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண் மூலம் அழைத்து கூறலாம் என்றும். அவர்களுடைய ரகசியங்கள் காக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, பள்ளிகளின் பெயர் கெட்டு விடுமோ என்ற நோக்கில் புகார்களை தெரிவிக்காமல் விட்டு விடக் கூடாது என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.