“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதி செய்யப்படாத இந்த தகவல்களை இப்போது சவுரவ் கங்குலியே உறுதி செய்துள்ளார். அதன் படி அவர் பிசிசிஐ தலைவராக தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிசிசிஐ தலைவராக தொடர்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அது உச்ச நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கங்குலியின் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படாமல் ரோஜர் பின்னி அந்த பதவிக்கு நியமிக்கப் படவுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்த போது கோலியிடம் மிக மோசமாக நடந்து கொண்டு அவரிடம் இருந்து கேப்டன் பதவியைப் பிடுங்கி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக இப்போது கங்குலி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கோலியிடம் மிகவும் தவறான அனுகுமுறையோடு நடந்துகொண்டதால்தான் இப்போது கங்குலி அவரே பிசிசிஐ தலைவராக தொடர ஆசைப்பட்டும் அது நடக்கவில்லை என்று கோலி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.