சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்! நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி!
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலைகளில் அவர்களிடம் யார் பாசமாக பேசினாலும், அவர்களை பெண்கள், குழந்தைகள் அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
அதுவும் மிக முக்கியமாக காதல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் நாமக்கல்லில் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அருகே உள்ள சூரிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் தங்கராசு. 33 வயதான இந்த நபர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016 ம் ஆண்டு மே மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இவர் கடத்திச் சென்றுள்ளார்.
மேலும் அந்த இளம் வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். எனவே இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட தங்கராசுவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பதினோறாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தங்கராசுவை கோவை சிறைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.