திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கின்றனர். அதாவது APSRTC பேருந்துகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் அந்த பேருந்திலேயே சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை ரூபாய் 300 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த வாய்ப்பினை திருப்பதிக்கு வரும் அனைத்து பக்தர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் APSRTC பேருந்துகளில் பயணிக்கும் பொழுது தவறாமல் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டை கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.திருப்பதிக்கு தினமும் 650 பேருந்துகளை APSRTC இயக்குகிறது. திருப்பதிக்கு ஒவ்வொரு டெப்போவிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது எனவே பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி இனி திருமலை தெய்வத்தை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, பெங்களூர், சென்னை, காஞ்சி, வேலூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தெய்வீக தரிசனத்திற்காக வரும் பயணிகளுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும் என்றும் அவர்களுடைய நேரம் ஆனது இதன் மூலம் மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.