நேற்று ( ஜனவரி 1 ) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக மற்றொரு சிறப்பு தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உரத்தின் விலையானது சர்வதேச மதிப்பில் உயர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் வழங்க முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 50 கிலோ எடையுள்ள டி ஏ பி பைகள் ரூ.1350 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது :-
2025 முதல் 2026 வரை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், வானிலை மாற்றங்கள் மற்றும் பயிர்களினுடைய தரங்களை உயர்த்துவது போன்ற முக்கிய நிகழ்வுகளில் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டத்திற்கு ரூ.69,515.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2025 ஆம் ஆண்டு இறுதி வரை விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்களை வழங்குவதற்காக டி ஏ பி உரத்திற்கான என் பி எஸ் மானியத்துடன் சிறப்புத் தொகுப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த நடவடிக்கையின் மூலம் விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் விவசாயிகளுக்கு உடனடி உதவி வழங்கப்படும் என்றும் பதியா அமைச்சர் தெரிவித்துள்ளார்.