பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறார் என்றும் அதன்படி சி மற்றும் டி பிரிவு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முறையே 3000 ரூபாய் மிகை ஊதியமாக வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவை மட்டுமில்லாமல், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நடப்பாண்டான 2023 மற்றும் 2024 இல் முழு மற்றும் பகுதிநேர சிறப்பு பணியாளர்களுக்கு 1000 ரூபாய் மிகை ஊதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கை :-
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு மிக ஊதியமாக 7000 ரூபாய் வழங்கும் நிலையில், தமிழக அரசு 3 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குவது ஏற்புடையது இல்லை என்றும் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் என பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்ற புதிய கோரிக்கையை சங்கத்தினர் வைத்திருக்கின்றனர்.