தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கட்டப்பட்ட புதிய வீடுகளை வாங்க 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை பெற உதவிடுமாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 8 ஆம் தேதியான நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்கள் பெரிது அளவு பயன்பெறுவர் என்றும், இதன் மூலம் பயனாளர்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ.வீர ராகவராவ், தமிழ்நாடு கட்டுமான வாரிய செயலாளர் க.ஜெயபால் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.