தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டமானது துவங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பழுதடைந்த மற்றும் சீரமைக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய பழைய அரசு வீடுகளை இடித்து அதை புதிய வீடுகளாக கட்டுவதற்கு தமிழக அரசு தரப்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினுடைய முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 210 சதுர அடி இருக்கக்கூடிய வீடுகளுக்கு ரூ.2.40 லட்சம் என்ற வேதத்தில் பணம் வழங்கப்படும் என்றும் பயனாளிகள் தங்களுடைய விருப்பப்படி கூடுதல் வசதிகளை சேர்க்க விரும்பினால் அதனை அவர்களுடைய சொந்த செலவில் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2000 2001 ஆம் ஆண்டிற்கு முன்னதாக அரசுத் திட்டங்களின் கீழ் கட்டித் தரப்பட்ட வீடுகள் தற்பொழுது முழுமையாக சேதம் அடைந்திருந்தால் அல்லது பழுது பார்க்கவே முடியாத நிலையில் இருக்கிறது என்றால் அவற்றை திட்டத்தின் கீழ் சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு :-
✓ வீடு பயனாளியின் பெயரில் அரசு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருத்தல் அவசியம்
✓ பயனாளி இறந்திருந்தால் அவரது சட்டபூர்வ வாரிசுகள் குடியிருந்தால் மட்டுமே தகுதி பெற முடியும்
✓ பயனாளி வேறு எந்த வீட்டையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது
✓ விற்கப்பட்ட வாடகைக்கு விடப்பட்ட அல்லது சட்டபூர்வமற்ற வாரிசுகள் குடியிருந்தால் அந்த வீடுகள் திட்டத்தில் சேர்க்கப்படாது
✓ ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சொந்தமான வீடுகள் திட்டத்தில் சேர்க்கப்படாது.
பயனாளிகள் தேர்வு செய்யும் முறை :-
வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களுடன் அதாவது ஆறு பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்படும் என்றும் அந்த குழு வீடுகளை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.