இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றது முதலே பல்வேறு விதமான வர்த்தகப் போர், வெளிநாட்டவர்களை நாடு கடத்துதல், முறையாக குடியேறியவர்களையும் அவரவருடைய நாட்டிற்கு அனுப்புதல் போன்ற பல குடியேற்ற விதிகள் பின்பற்றப்பட துவங்கியுள்ளன.
சூழ்நிலை இவ்வாறு இருக்க, H-1B விசா வைத்திருக்கக் கூடிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த மண்ணிற்கு செல்ல வேண்டாம் என்றும் விடுமுறைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ அமெரிக்காவை விட்டு செல்லும் பட்சத்தில் மீண்டும் அவர்கள் அமெரிக்காவினுள் நுழைய முடியாத நிலை ஏற்படலாம் என அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களான அமேசான், google, மெட்டா போன்ற பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
ஏற்கனவே இதுபோன்ற குடியேற்ற விதிகள் புதிதாக மாற்றப்பட்டதால் தங்களுடைய சொந்த நாடுகளுக்குச் சென்ற ஊழியர்கள் மீண்டும் அமெரிக்காவில் நுழைவதற்கு பல்வேறு சவால்களை சந்தித்ததாகவும் மேலும் பலரை சரியான சான்றிதழ்கள் இருந்த பொழுதிலும் மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பியதால் தங்களுடைய ஊழியர்களை இம்முறை அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை குடியேற்ற விதிகள் என்பது அதிபரை பொறுத்துதான் அமையும் என்பது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது. காரணம் நாட்டை விட்டு தொழிலாளர்கள் வெளியேறும் பொழுது இருக்கக்கூடிய குடியேற்ற விதியானது மீண்டும் அவர்கள் நாட்டுக்குள் நுழையும் பொழுது இருப்பதில்லை.
அந்த தருணத்தில் அமெரிக்க அதிபராக இருக்கக்கூடியவர் என்ன முடிவு எடுக்கிறாரோ என்ன விதிகளை வகுக்கிறாரோ அதன்படி தான் அமெரிக்காவில் குடியேற்றங்கள் நடைபெறும் என ஏற்கனவே உணர்ந்ததால் இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.