அரசு அறிவித்தும் அதிகாரிகள் மறுப்பு! விரக்தியில் விவசாயிகள் கோரிக்கை

Photo of author

By Parthipan K

ஈரோட்டில் கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர் நடவு செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்கள் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டப்பட்டு சேமிப்பாக கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் கோடி ரூபாய் மதிப்பிலான நெல்கள் கிடப்பில் கிடக்கின்றன. இதையடுத்து கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு பிறகு கொள்முதல் நிலையங்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, சிவகிரி, அவல்பூந்துறை, கொடுமுடி, எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஏராளமான நெல் கொள்முதல் நிலையங்கள் இருப்பினும்,

கணபதிபாளையம் மற்றும் கொடுமுடி அருகில் இருக்கக்கூடிய சாலைபுத்தூர் ஆகிய இடங்களில் இருக்கும் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளன. மற்றவை அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றனர். இதன் காரணமாக அவல்பூந்துறை, சிவகிரி , மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகள் நெல்களை நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டுவதற்காக எடுத்து சென்ற போது,

அவற்றை சேமித்து வைக்க இடமில்லை என்று கூறி அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் நெல்கள் தேவையில்லாமல் வீணாக கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.