மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை! வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு!
இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவில் மூலிகை கண்காட்சி அமைத்தனர். இதற்கு மிக முக்கிய காரணமானவர் சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள்.
இவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் இந்த கண்காட்சி சாத்தியமானது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட மூலிகை கண்ணாடி அலமாரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தினந்தோறும் பார்க்கும் வகையில் சில மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு உள்ளது. அதில் மிக அதிக மருத்துவ குணம் நிறைந்த நறுவல்லி ,இன்சுலின் செடி, தூதுவளை, மாசி பத்திரி, சிற்றத்தை ,சீனி துளசி ,மருதாணி, திப்பிலி ,பல்வலி பூண்டு,செம்பருத்தி,நெல்லி ஆடாதோடை போன்ற பல்வேறு மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் இந்த மூலிகை கண்காட்சி உள்ளது.மேலும் மக்கள் பார்வையிட்டு அதன் மருத்துவ குணங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்கின்றனர். அதற்கான கையேடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்ட்சியை நடத்திய வாழப்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவம் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.