கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? நிபுணர் குழு பரிந்துரை
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்த வகையில் சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்தது.இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டதால் அதை மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதாக நினைத்த அரசு ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.இதனால் இது கொரோனா பரவலின் இரண்டாம் அலையா என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இரவு நேர ஊரடங்கு பரிந்துரை:
இதனையடுத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த 10 நாட்களில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் மட்டுமே ஒரே நாளில் 1,500 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு அங்கு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலானது அதிகரித்து வருவதால் அம்மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் அண்டை மாநிலங்களிலுள்ள மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.குறிப்பாக கர்நாடக மக்கள் இதனால் அச்சமடைந்துள்ளனர்.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால் மகாராஷ்டிராவில் பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கொரோனா தடுப்பு ஆலோசனை நிபுணர் குழு அம்மாநில அரசுக்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.