ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழகத்தில் கடந்த சில வருடமாக ஆன்லைன் சூதாட்டம் மூலம் எண்ணற்ற நபர்கள் தங்கள் பணத்தை பறி கொடுத்து அதன் மூலம் விலை மதிப்பற்ற தன் உயிர்களை இழந்துள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்து பலரது வாழ்வினை மீட்கவேண்டும் என மாநிலம் முழுவதும் கண்டன குரல்களும், போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர தடை கொண்டு வர அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் இந்த சட்ட மசோதா தொடர்பாக எந்த வித பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில் அதில் சில சந்தேகங்களை கேட்டு அரசுக்கு திருப்பி அனுப்பினர்.
ஆளுநரின் இந்த செயலால் பல உயிர்கள் பலியாகி வருகின்றன என்ற குற்றச்சாட்டை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் கூறி வந்த நிலையில், மீண்டும் சட்டமன்றத்தில் இதே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த சமயத்தில் ஆளுநர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த பின்பு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் மாணவர்களிடையே பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதனிடையே ஆளுநர் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால அவகாசம் நிர்ணயம் செய்ய மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவரை வலியுறுத்தும் தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்ற பட்டது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஆளுநர் ஆர் என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் விரைவில் இந்த சட்டம் அமலுக்கு வந்து எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.