ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!!
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், டிசம்பர் 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது.இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று ஆளுநர் விளக்கம் அளித்து உள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 பேர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டு வர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும், சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதா தொடர்பாக 8 கேள்விகளை ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியிருந்தார். அதற்கான விளக்கத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று கொடுத்தார். ஆனால், தற்போது அந்த விளக்கத்தை ஏற்காமல் ஆளுநர் அதை திருப்பி அனுப்பியுள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கே அதுபோன்ற சட்டங்களை இயற்ற அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதில் அதிகாரம் இல்லை என்றும் ஆளுநர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த சூழ்நிலையின் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான மசோதாவும் இதேபோல திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.