“ஆட்சிகளை கவிழ்க்கவே ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்”: ஒன்றிய அரசு மீது சீதாராம் யெச்சுரி கடும் விமர்சனம்!
பாரதி ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுகளை கவிழ்ப்பதற்காகவே ஆளுநர்களை பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
“மாநில உரிமை மீட்க புதுச்சேரி மக்கள் நலன் காக்க” என்ற தலைப்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சீர்குலைக்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசு நோக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சீதாராம் யெச்சூரி கூறினார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள பாரதிய ஜனதா அரசு, தான் ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே ஆளுநர்களை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
புதிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை இளம் தலைமுறைக்கு புகழ்த்துவதே அதன் நோக்கம் என்றும் சீதாராம் யெச்சூரி விமர்சித்தார். இந்துராஷ்டிர கொள்கைகளை அமல்படுத்துவதே பாஜகவின் முக்கிய கொள்கையாக இருப்பதாகவும், அதனை பிரதமர் மோடியே முன் நின்று செய்வதாகவும் அவர் சாடினார்.