வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறி சைபர் அடிமைகளாக மாற்றப்படும் பட்டதாரிகள்!! சைபர் கிரைம் எச்சரிக்கை!!

Photo of author

By Gayathri

தமிழ்நாடு சைபர் கிரைம் ஆனது வேலை தேடுபவர்களை குறி வைத்து நடக்கக்கூடிய மோசடிகளை குறித்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இதில் இணையதளம் மூலமாக வேலை தருவதாக விளம்பரங்கள் செய்து அதை நம்பி வரக்கூடிய இளைஞர்களை தங்களுடைய இடத்திற்கோ அல்லது தங்களுடைய நாட்டிற்கோ வர வைத்து அவர்களை சைபர் கிரைம் போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்படி பயன்படுத்தப்படுபவர்களை சைபர் அடிமைகள் என்று அழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால்சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனிதவள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது என்றும் சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளர் (Protector of Emigrants . PoE), சென்னையில் இவ்வாறான அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களுடன் தொடர்புடைய சமூக ஊடக இணைப்புகள், இணையதளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 128 URLகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். சைபர்கிரைம் பிரிவு, தமிழ்நாடு அதன் மீது நடவடிக்கை எடுத்து, இந்த URLகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சைபர் கிரைம் கூறியுள்ள அறிவுரைகள் :-

✓ சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்பவர்களைத் தவிர்க்கவும் முறையான ஆவணங்கள் இல்லாமல் அல்லது ஏதேனும் சமூக ஊடகத்தின் விளம்பரங்களின் மூலம் வேலைகளை உறுதியளிக்கும் ஏஜென்சிகளை ஒரு போதும் நம்ப வேண்டாம்.

✓ அங்கீகாரத்தைச் சரிபார்க்கவும்: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளரால் (PoE) அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்களை மட்டும் அணுகவும்.

✓ ஆட்செர்ப்பு முகமைகளைச் சரிபார்க்கவும்: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) eMigrate போர்ட்டலில்
https://www.emigrate.gov.in/ பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்சேர்ப்பு முகவர்களின் பட்டியல் உள்ளது. இதன் மூலம் ஆட்செர்ப்பு முகமைகளைச் சரிபார்க்கலாம்.

✓ குடியேற்றச் சட்டம், 1983 இன்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இல்லாமல் ஆட்சேர்ப்பு முகவராகச் செயல்பட எந்த நபருக்கும் அதிகாரம் இல்லை

✓ பதிவுச்சான்றிதழைக் கேளுங்கள் ஆட்சேர்ப்பு முகவர்களிடம் தங்கள் பதிவுச்சான்றிதழை உங்களிடம் காண்பிக்கும்படி கேளுங்கள். அந்த சான்றிதழில் இருக்கும் உரிம எண்ணைச் சரிபார்க்கவும் மேலே குறிப்பிட்டுள்ள போரட்டலில் சரிபார்க்கவும்

✓ விழிப்புடன் இருங்கள்: சந்தேகத்திற்கிடமான ஆட்சேர்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டால், உடனடி நடவடிக்கைக்காக, emigrate போர்ட்டலில் அல்லது காவல்துறையிடம் புகாரளிக்கவும்.

நீங்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யலாம் என்று சைபர் களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.