முதல்வர் திறனாய்வு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வருகிற ஜனவரி 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ஜனவரி 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ள முதல்வர் திறனாய்வு தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தேர்வு மையம் மூலமாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இந்த விவரங்களை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுடைய ஹால் டிக்கெட்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பு மை கொண்ட பேனாவால் திருத்தலாம் என்றும் புகைப்படத்தில் ஏதேனும் பிழை இருந்தால் அதன் மீது புதிய புகைப்படம் ஒட்டி பள்ளியின் உடைய சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு வாரியங்களில் இவ்வாறான திருத்தங்களுடன் ஹால் டிக்கெட்டை எடுத்து வரும் மாணவர்களை தேர்விற்கு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் அனுமதிக்க வேண்டுமென்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் வரை ஒரு கல்வியாண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.