“பாத்துக்கலாம் விடு….” விக்ரம் கமல் பாணியில் கடைசி ஓவரில் கூலாக விளையாடிய பாண்ட்யா!
நேற்றைய திரில் போட்டியில் இந்திய அணி கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய அவர், பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். அதில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம். கடைசி ஓவரில் 3 பந்துகளில் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்றிருந்த பரபரப்பான நிலையில் எதிரில் இருந்த தினேஷ் கார்த்திக்கை பார்த்து ஹர்திக் பாண்ட்யா மிகவும் கூலாக “பாத்துக்கலாம்” என்று சைகை காட்டினார். அடுத்த பந்தே சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் அந்த கூல் மனப்பான்மை தற்போது ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் “பந்துவீச்சில், சூழ்நிலைகளை மதிப்பிடுவது மற்றும் உங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை, ஷார்ட் பந்துவீச்சும், ஹார்ட் லெந்த்தும் எனது பலம். இது, மட்டையாளர்களை தவறு செய்ய சரியான கேள்விகளைக் கேட்கும் பந்துகள் ஆகும். இதுபோன்ற துரத்தலில், நீங்கள் எப்போதும் அதிகமாகத் திட்டமிடுவீர்கள்.
ஒரு இளம் பந்து வீச்சாளர் மற்றும் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருப்பது எனக்கு எப்போதும் தெரியும். கடைசி ஓவரில் எங்களுக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன, ஆனால் எங்களுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டாலும், அதற்கேற்றார்போல விளையாடி இருப்பேன். 20வது ஓவரில் என்னை விட பந்துவீச்சாளர் அதிக அழுத்தத்தில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். விஷயங்களை எளிமையாக வைக்க முயற்சிக்கிறேன்.” என ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.