இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் வசூல் செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் சமீபத்தில் கொலை, தொடர் திருட்டு, வெடிகுண்டு கலாச்சாரம், இரவில் மது அருந்துவிட்டு கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு ரோந்து காவலை உறுதிப்படுத்தவும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டிஜிபி மனோஜ்குமார் லால் ஆகியோர் தலைமையில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் நடந்தது, இக்கூட்டத்தில் ஏடிஜிபி ஆனந்தமோகன், முதுநிலை கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்த போது புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல், தொடர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், புதுச்சேரி மாநிலம் அமைதி மாநிலமாக இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்காக டூரிஸ்ட் போலீஸ் என்ற புதிய பிரிவு உருவாக்கப்படும் அது சுற்றுலா பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தவர் ரெஸ்டோபார்களுக்கு நேரக்கட்டுப்பாட்டை விதிக்க கலால்துறையிடம் கோரப்பட்டு இது தொடர்பாக முதல்வர் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும், தொடர்ந்து இதனை கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.