குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக இத்தனை கோடி செலவிட்டுள்ளதா?
உண்மை அறிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
குஜராத்தில் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சி பொறுப்பு வகித்து வருகின்றது.
இந்நிலையில் பாஜகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழும் குஜராத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.மொத்தம் 182 சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அம்மாநில தேர்தலில் ஆளும் பாஜக சுமார் 157 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அனைவரும் எதிர்பார்த்த படி முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்தது .
இந்நிலையில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக செய்த மொத்த செலவின அறிக்கையை கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி தலைமை சமர்ப்பித்தது.இதையடுத்து தேர்தல் ஆணையம் பாஜகவின் செலவின அறிக்கையை ஆய்வு செய்து நேற்று பொது களத்தில் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் இருப்பது என்னவென்றால் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.41 கோடி வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் குஜராத்திற்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் மேற்கொண்ட பயணத்திற்காக சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.160.62 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் மொத்த செலவினம் ரூ.209.97 கோடி என்று பாஜக சமர்ப்பித்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.