கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா?
எந்த தேர்தல் வந்தாலும் பரபரப்பாய் காணப்படும் கோவை தொகுதி, இந்த தேர்தலிலும் மும்முனை போட்டியாய் இருக்கிறது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை முதன்முதலாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் தொகுதியில் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது.
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று இருந்ததை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாற்றியது. காரணம் அக்கட்சியின் முக்கிய நபராக இருந்த செந்தில் பாலாஜிதான். திமுக தலைமை கோவை தொகுதியை செந்தில் பாலாஜியின் பொறுப்பிலேயே கொடுத்துவிட்டது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு பின்னர் அத்தொகுதியில் திமுகவின் செல்வாக்கு சற்றே குறைந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் பார்க்கையில் பாஜகவின் வளர்ச்சி சிறிது அதிகரித்திருக்கிறது. முக்கியமாக இந்த தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலையே போட்டியிடுவதால் மக்களிடம் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும், தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் பாஜகவினர் நம்புகின்றனர்.
ஒருவேளை கோவையில் திமுக சறுக்கலை சந்திக்குமா? என்று பார்க்கும்போது அக்கட்சியின் வேட்பாளர் கணபதி ராமச்சந்திரன் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வணிகர் சங்க அமைப்புகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அவரது கை ஓங்கியுள்ளது.
அதேநேரம் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராஜ்குமாருக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. ஏற்கனவே கொங்கு அதிமுகவின் கோட்டை என்று கருத்து இருப்பதால் அவர்களும் போட்டியில் சமமாக உள்ளனர். இதனால் 3 கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் கோவை தொகுதியில் பரபரப்புடன் களம் கண்டுள்ளன.