மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். “நான் உங்களைப் போல தந்தையின் பெயரில் இல்ல, உழைப்பின் பேரில் வந்தவன்” என்ற அவரது பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி = பொய்கள் + ஊழல்:
மயிலாடுதுறையில் வாகனப் பேரணியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டம் கூட வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர் , “நாங்கள் புதிய மாவட்டம் அறிவித்ததால் தான் இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது. அதையும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கைப்பற்ற முயல்கிறது” என்றும் தெரிவித்தார்.
மன்னர் ஆட்சி – வாரிசு அரசியல் விமர்சனம்
“மக்கள் ஆதரவு குறைந்ததால், ஸ்டாலின் முதல்வர் பதவியை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிடுகிறார்” என்றும், “திமுக அரசின் அடிப்படையே வாரிசு அரசியல், அதில் ஜனநாயகத்திற்கே இடமில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி உரையில் விமர்சித்தார்.
பிறக்கும் குழந்தைமேல் கூட கடன்
திமுக ஆட்சியில், தமிழகத்தின் கடன் ரூ.5.38 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டதாகவும், இன்று பிறக்கும் குழந்தை மேல் கூட ரூ.1.5 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
தந்தையின் அடையாளம்
“நான் ஏர் ஒட்டிய கை. கோட் சூட் போட்டுக் காட்சி அளிக்கத் தெரியாது. தந்தையின் அடையாளத்தில் நான் வரவில்லை; உழைத்து வந்தவன்” என்று ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து, தான் வந்த வழி வேறுபட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
பொய்களை விற்று ஆட்சி பிடித்த அரசு
ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் 10% கூட செயல்படுத்தப்படவில்லை என பழனிசாமி சாடினார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியதையும் சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சியில் அதை மீண்டும் செயல்படுத்துவோம் என உறுதியளித்தார்.
தேர்தல் விழிப்புணர்வு
“முயற்சியால் வந்த அரசியல்வாதிகளுக்கு மதிப்பு இருக்காத திமுக அரசை மாற்ற, வரும் தேர்தலில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். திமுக வாரிசு ஆட்சிக்கு விடை கூற வேண்டிய தருணம் இது” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.