ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பலர் யோஷிஹைட் சுகாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 14-ந் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் யோஷிஹைட் சுகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

