இன்று (மே, 31) உலக புகையிலை ஒழிப்புதினமாகும். இந்நாளில் இந்தியாவின் பல மாநிலங்களில் புகையிலை ஒழிப்பு திட்டம் எவ்வாறு சாத்தியப்பட்டது என்பதை பார்க்கலாம்.
இந்திய இளைஞர்களிடையே மிக தீவிரமாக பரவிவரும் தவறான பழக்கத்தில் புகைபிடித்தல் பழக்கமும் ஒன்று. ஒரு காலத்தில் வயதானவர்கள் மட்டுமே அதிகமாக புகைபிடித்த காலம் கடந்து, தற்போது கேளிக்கை மற்றும் தவறான நண்பர்கள் மூலம் மது, புகை, குட்கா, பான்மசாலா போன்ற பழக்கத்தில் சிறுவயதில் இருந்து இளைஞர்கள், முதியவர் வரை வேகமாக பரவி வருகிறது. புகை பிடிப்பதால் வரும் நோய் பாதிப்புகளை பற்றி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் அதில் பலர் சிக்கிக் கொண்டு நுரையீரல் பாதிப்பு போன்ற நோயினால் தவித்து வருகின்றனர்.
இந்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பதவி ஏற்கும் முன்பு பகாசூர புகையிலை நிறுவனங்கள் தமது நச்சுத்தன்மை கொண்ட புகையிலை பொருட்களை இந்திய இளைஞர்களிடையே திணித்து வந்தன. இந்த நிறுவனங்கள் பணபலம், அதிகார தொடர்பு மற்றும் பன்னாட்டு ஆற்றலைக் கண்டு புகையிலை நிறுவனங்களை யாருமே கட்டுப்படுத்த முடியாத அவல நிலை இருந்து வந்தது. இந்நிலையில் சிகரெட், பான்மசாலா போன்ற நிறுவனங்களுக்கு மருத்துவர் அன்புமணி மிகப்பெரும் தலைவலியை கொடுக்க ஆரம்பித்தார்.
இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் தீய பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அன்புமணி உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைசட்டங்களை கொண்டுவந்தார். பான்மசாலா, குட்கா போன்றவை இதன்மூலம் தடை செய்யப்பட்டது. உணவுப் பொருட்களில் புகையிலை இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இதனடிப்படையில் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலம் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களும் குட்காவை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.