குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உலர்விதை பாதாம்.இதில் பொட்டாசியம்,நார்ச்சத்து,புரதம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம் உள்ளிட்ட ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இந்த பாதாம் பருப்பில் இருந்து பாதாம் மிக்ஸ் தயாரித்து பாலில் கலந்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 250 கிராம்
2)ஏலக்காய் – இரண்டு
3)வெள்ளை சர்க்கரை – 100 கிராம்
4)பால் பவுடர் – 50 கிராம்
5)குங்குமப் பூ அல்லது மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு அகலமான பாத்திரத்தில் 250 கிராம் பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
மறுநாள் பாதாம் ஊறவைத்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு புதிதாக தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் பாதாம் பருப்பின் தோலை நீக்க வேண்டும்.பிறகு இதை ஒரு மணி நேரம் வரை உலரவிட வேண்டும்.
அதற்கு அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து பாதாமை போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு ஈரமில்லாத பாத்திரத்தில் பாதாம் பொடியை கொட்ட வேண்டும்.அதற்கு அடுத்து மிக்சர் ஜாரில் 100 கிராம் சர்க்கரை,50 கிராம் பால் பவுடர் மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை அரைத்து வைத்துள்ள பாதாம் பவுடரில் கொட்டி கலக்க வேண்டும்.
பிறகு அதில் கலருக்காக குங்குமப்பூ அல்லது கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.பிறகு ஒரு ஈரமில்லாத டப்பாவில் இந்த பாதாம் பொடியை கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் சேர்த்து சூடாக்கவும்.பால் கொதி வரும் நேரத்தில் பாதாம் பொடி இரண்டு தேகர்ந்து அளவு சேர்த்து காய்ச்சவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி மகிழ்ச்சியுடன் பருகலாம்.