ஆரோக்கியம் நிறைந்த நேந்திர வாழைப்பழ ரவை உருண்டை! இப்படி செய்து பாருங்க!
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய சத்துக்கள் நிறைந்த உணவு வகையான நேந்திர வாழைப்பழ ரவை உருண்டை செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப் பழத்தில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றது. வாழைப் பழம் பொதுவாக மலமிறக்கியாக பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாழைப் பழத்தை சாப்பிட்டால் போதும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகி விடும்.
மேலும் வாழைப் பழத்தில் பலவகையான சத்துக்கள் இருக்கின்றது. வாழைப் பழத்தில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள், விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்பட பல வகையான சத்துக்கள் இருக்கின்றது. தற்பொழுது வாழைப்பழ ரவை உருண்டை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நேந்திர வாழைப்பழம்
* பால்
* நெய்
* வெள்ளை ரவை
* தேங்காய் துருவல்
* சர்க்கரை
* ஏலக்காய் தூள்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் காடாய் ஒன்றை வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இரண்டு நேந்திர வாழைப் பழங்களை தோல் உரித்து சிறிது சிறிதாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். வாழைப் பழம் நிறம் மாறும். நிறம் மாறிய பின்னர் கரண்டியை பயன்படுத்தி வாழைப் பழத்தை மசித்துவிட வேண்டும்.
பின்னர் இதனுடன் கால் கப் அளவு ரவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ரவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை கப் அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேங்காய் துருவல் நன்றாக வறுபடும் வரை வகுக்க வேண்டும். தேங்காய் துருவல் நன்றாக வறுபடவில்லை என்றால் உருண்டை சரியாக வராது.
பின்னர் இதில் இரண்டு கப் அளவிற்கு பால் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட வேண்டும். இறுதியாக இதில் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி இறக்க வேண்டும். இதை இறுதியாக உருண்டைகளாக பிடித்து மூன்று ஸ்பூன் நெய்யில் வறுத்தெடுத்தால் சுவையான ஆரோக்கியம் நிறைந்த நேந்திர வாழைப்பழ ரவை உருண்டை தயார்.