தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் ஆறு இரயில்கள் இரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் சென்னை தற்பொழுது மழையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வடகிழக்கி பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பான்ற தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் கனமழை பெய்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சில அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் இன்று(டிசம்பர்18) ஆறு இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் இரயில் மற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் இரயில் இரண்டு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போல சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு இரயில் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூர் முதல் பாலக்காடு வரை இயங்கும் விரைவு இரயிலும், நெல்லை முதல் ஜாம்நகர் வரை இயங்கும் விரைவு இரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.