தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை நீடிப்பதால் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.