தண்ணீர் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Photo of author

By Anand

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதை சாதகமாக பயன்படுத்தி பெரும்பாலான மக்கள் குடிப்பழக்கத்தை விட்டு விடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் இதிலிருந்து விடுபடாமல் வேறு வகையான போதை பொருட்களை தேடிச் செல்கின்றனர்.

இந்நிலையில் அந்தவகை நபர்களுக்கு விற்பதற்காக தண்ணீர் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா, பணம், தண்ணீர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த தண்ணீர் ஏற்றி கொண்டு செல்லும் லாரியை மறித்தனர்.

பின்னர் அந்த லாரியிலும், அதனருகே இருந்த இருசக்கர வாகனத்திலும் இருந்த 5 கிலோ கஞ்சா, 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இவ்வாறு தண்ணீர் லாரியில் கஞ்சா கடத்திய மதுரையை சேர்ந்த சுந்தர மகாலிங்கம், கோவையை சேர்ந்த முகமது யாசின் மற்றும் சிவகங்கையை சேர்ந்த பாண்டிபிரபு ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.