மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

0
177

மரக்காணம் கலவரத்தில் பாமகவிடம் இழப்பீடு கேட்க முகாந்திரம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது நடந்த கலவரத்தில் பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழாவை நடத்தியது. இதில் கலந்து கொள்ள வந்த பாமகவினர் மீது அங்கிருந்த விசிக கட்சியினர் தாக்குதல் நடத்த பதிலுக்கு பாமகவினரும் தாக்குதல் நடத்த அங்கு கலவரம் ஏற்பட்டது.

 

இந்த கலவரத்தின் போது காவல்துறை அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

மேலும், புதுச்சேரி – மைலம் சாலை, கரசனூரில் உள்ள பாலம் உள்ளிட்டவைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் இதை சேதப்படுத்திய பாமக ரூ. 18 லட்ச இழப்பீடாக அரசுக்கு செலுத்த வேண்டுமென அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாமகவின் அப்போதைய தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

அதில் கலவரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறி நோட்டீஸ் அனுப்பியது தவறு என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாமக இழப்பீடு செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Previous articleமரத்தடியில் கஞ்சா புகைக்கும் பள்ளி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ
Next article20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி