அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியான எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில்; அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் நடுவே மோதல் உண்டானது.

இருதரப்பிற்குமிடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கே நடைபெற்ற வன்முறையையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் இவை அனைத்துமே திமுக பன்னீர்செல்வத்தின் பின்னாலிருந்து செய்யும் வேலை என்று பலர் தெரிவிக்கிறார்கள்.

இந்த வருடம் அதிமுக தொடங்கி 50ஆவது பொன்விழா ஆண்டு ஆகவே இந்த சமயத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை பூட்டினால் அது அந்த கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே திமுகவின் திட்டமாக இருந்ததாக பலர் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் இந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தது குறித்து அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோர் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.

அதோடு இது குறித்து ராயப்பேட்டை காவல் துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரம் காவல் துறையினர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மற்றும் கைது செய்துவிட்டு பன்னீர்செல்வம் தரப்பினரை கைது செய்யாமல் இருந்தது ஏன் என்று கேள்வியும் எழுந்திருக்கிறது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார். இந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கவும் தீர்ப்பளித்தது.

அதோடு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதத்தில் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரை அலுவலகத்திற்கு அனுமதிக்க கூடாது எனவும், உத்தரவிட்டது. அதிமுகவின் அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் இந்த தீர்ப்பின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.