பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…

Photo of author

By Sakthi

 

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…

 

பிராய்லர் கோழிகளில் ஹார்மோன் ஊசி செலுத்தப்படுகிறது என்று நிரூபித்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

தற்பொழுது நாட்டு கோழிகளை விட பிராயலர் கோழிகளை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கடைகளிலும் பிராய்லர் கோழிகள் தான் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பிராய்லர் கோழிகளின் வளர்ச்சி குறைந்த நாட்களில் அதிக எடையுடன் பெரிதாக இருக்கின்றது. அதற்கு ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாகவும் ஹார்மோன் ஊசி செலுத்தப்படும் பிராய்லர் கோழிகளை சாப்பிட்டால் நம் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது என்றும் செய்திகள் பரவி வருகின்றது.

 

நாடு முழுவதும் பரவி வரும் இந்த கருத்தால் பிராய்லர் கோழிகளின் விற்பனை பாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிராய்லர்.கோழிகளை சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது என்ற கருத்தை பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பிராய்லர் கோழியில் புரதச் சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான புரதச் சத்து அதிகளவில் கிடைக்கின்றது என்றும் கூறுகிறார்கள்.

 

இந்நிலையில் கேரள பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் பிராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகின்றது என்பதை நிரூபித்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

 

இது குறித்து கேரளம் பிராய்லர் கோழிகள் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் “அசைவம் சாப்பிடும் அனைவரும் பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் நாடு முழுவதும் பிராய்லர் கோழிகள் பற்றி பல தவறான கருத்துக்கள் பரவி வருகின்றது. அந்த தவறான கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறினர்.

 

மேலும் பாலக்காடு பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் அதிகாரி ஹரிக்கிருஷ்ணன் அவர்கள் “பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்கு ஹார்மோன் ஊசிகள் காரணம் என்று கூறுவது தவறானது. பிராய்லர் கோழிகள் வளர்ச்சி அடைவதற்கு செரிவூடீடப்பட்ட தீவனம் கொடுக்கப்படுகின்றது. மேலும் நோய்த் தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு தான் பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்” என்று கூறியுள்ளார்.