பொறாமை எண்ணத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

Photo of author

By Parthipan K

பொறாமை எண்ணம் என்பது நமக்கும் உள்ளது என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு அதை நாம் கட்டுப்படுத்த வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும்.

மேற்சொன்ன இரண்டு கருத்துக்களுமே, எப்போதும் தேவையற்ற எண்ணங்களையும், குணங்களையும் அழித்து புதிய எண்ணங்களை வளர்க்க உதவும். மாற்றாக, நான் பொறாமையே படுவதில்லை என்று எண்ணிக்கொண்டால் ஒருபோதும்
அதிலிருந்து மீள முடியாது.

இதில், நம்மை விட
அதிக வருமானம் ஈட்டுபவர்கள், அதிக புகழ் சேர்த்து வைத்திருப்பவர்கள்,
அதிக சொத்து வைத்து இருப்பவர்கள், சிறப்பான சொந்தங்களுடன் வாழ்பவர்கள்,
உயிரையே கொடுக்க துணியும் நண்பர்களுடன் இருப்பவர்கள்
அழகான வசீகரத்துடன் இருப்பவர்கள் என
இப்படி பலரையும் கண்டு பொறாமை எண்ணம் தலைதூக்குவதுதான் மனித இயல்பு.

How to control jealousy?
How to control jealousy?

முதலில் பொறாமை கொள்ளுதல் என்பது மனிதனின் இயல்பு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்

இருப்பினும் அதன் அளவு
நமக்கும் பிறர்க்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவு கூடிவிடக்கூடாது என்பதில் தான் நாம் பொறாமையைக் கட்டுப்படுத்தும் வசதி இருக்கிறது.

பொதுவாக பொறாமை எண்ணத்தை ஒழிப்பது என்பது இயலாத காரியம்,
அது எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கட்டுப்படுத்திட மட்டுமே முடியும். அதற்கெல்லாம் நாம் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
உதாரணமாக, ஒருவர் சம்பாதிக்கும் பணம் குறித்து பொறாமை தோன்றினால்
அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன? என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.

How to control jealousy?
How to control jealousy?

அவர் நேர்வழியில் அந்த பொருளை ஈட்டுகிறாரா? அல்லது தவறான பாதையில் பொருள் ஈட்டுகிறாரா ? என்பதை கவனிக்க வேண்டும்

அதற்காக அவர் செய்துள்ள முதலீடு என்ன?
அவர் தினமும் செலுத்தும் உழைப்பு எவ்வளவு?
இதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.

கூடவே நமக்கு மேல் சம்பாதிக்கும் மக்களை விட நமக்கு கீழ் பொருள் ஈட்டும் மக்களை பற்றி நினைக்க வேண்டும்.

இறைவன் நம்மை இந்த நிலையில் வைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்து விட்டு,
நாம் பொறாமை கொண்ட நபருக்கு இறைவன் இன்னும் அதிகம் வழங்குவானாக என்று பிரார்த்தனை செய்து
அந்த எண்ணத்தை கடந்து சென்று விட வேண்டும்.

உலகம் எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சை போன்ற தோற்றத்துடனேயே படைக்கப்பட்டுள்ளது
எப்போதுமே நாம் வைத்திருப்பதை விட
அடுத்தவன் வைத்திருப்பதே சிறந்ததாக தோன்றுவது உலகின் மாய இயல்பு

இருப்பதில்
கிடைத்ததில் மனநிறைவு அடைவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.
ஆனால் தொடர் பயிற்ச்சியால் நிச்சயம் கட்டுப்படுத்தக்கூடிய விசயம் தான்.

நமது எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வதுடன்,
ஒப்பீடின்றி நமக்கு கிடைத்திருப்பவற்றை மட்டுமே  வைத்துக்கொள்வது, நன்றியுடன் இருப்பது
போன்றவற்றை ஒரே நாளில் அடைய முடியாது.
ஆனால் சிறுகச்சிறுக எண்ணங்களை மாற்றி அமைக்கும் பயிற்சிகள் மூலம் நமது மூளையையும் அதனால் இயங்கும் மனதையும் நாம் கட்டுப்படுத்திட முடியும்

இருப்பினும் சிறிது சிறிதாக பயிற்சி மூலம் நம்மால் எண்ணங்களை மாற்றி குணங்களை மாற்றிட முடியும்.

பணக்காரர்களை பார்த்தால்
பொறாமை வருகிறதா?
ஏழைகளைப்பாருங்கள்

அழகு கூடியவர்களைப் பார்த்தால்
பொறாமை வருகிறதா??
அழகு குறைந்தவர்களைக் காணுங்கள்

காரில் செல்பவர்களைக் கண்டால் பொறாமை வருகிறதா?
நடந்து செல்பவர்களைக் காணுங்கள்

உலகில் நிகழும் பல குற்றவியல் செயல்கள் இந்த பொறாமையால் வருவதே ஆகும். அவன் வாங்கிட்டான்
நானும் வாங்கியாகணும்

அவன் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிட்டான்,
நானும் அவன விட அதிகமா செலவு பண்ணி கல்யாணம் பண்ணணும்.
அவன் பெரிய வீடு கட்டிட்டான்
நானும் அவன விட பெரிய வீடா கட்டுவேன்,
இப்படி ஒவ்வொன்றுக்கும் போட்டி பொறாமைப்படும் நாம், ஒருவிசயத்தில் மட்டும் அடுத்தவனை முந்த வேண்டும் என்று நினைப்பதில்லை

அதுவே மரணம்..
அவரை விட ஒரு நாளாவது சீக்கிரம் நான் சாகணும் இறைவா என்று யாரும் பிரார்த்திப்பதில்லை,

ஆனால் பொறாமை எண்ணத்திற்கான நேரடி  முறிவு மருந்து (Antidote)
என்று உண்டெனில் அது மரணம் குறித்த எண்ணம் தான். ஒருவர் மீது
பொறாமை எண்ணம் தோன்றும் போதெல்லாம் மரணத்தைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கதவு அடைக்கப்படும் போது
ஒரு கதவு திறந்து கொள்கின்றது.
ஒரு கையில் பூ மனக்கும் போது,
மறுகையில் முள் தைக்கிறது.
ஒரு கால் இடறி விழ
மறு கால் தாங்குகிறது
ஒரு கை நீட்ட
மறு கை வழங்குகிறது

ஒரு இதயம் துடிப்பதை நிறுத்தும்
அதே வேளையில் இன்னொரு இதயம் துடிக்க ஆரம்பிக்கின்றது

வாழ்க்கை எனும் பயணத்தில்
நாம் அனைவரும் பயணிகள் என்ற எண்ணத்தை நம்முள் விதைத்துக்கொண்டால்
நிச்சயம் பொறாமை சிந்தனையை முடிந்த வரை கட்டுப்படுத்த முடியும்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை