இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் – மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி
நடிகரும் பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்பட படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடரில் நடிகர் மாரிமுத்து ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மாரிமுத்துவின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இந்த சீரியலில் பேசும் வசனங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் சமீப காலமாக ட்ரெண்ட்டாகி வந்தது.
இந்நிலையில் இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக இவர் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போனார்கள். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பிரபல நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பலர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய உடல் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியது ட்ரெண்டாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், தேனீ மாவட்டத்தில் இருக்கும் பசுமலைத்தேரி என்ற கிராமத்தில் பிறந்தேன். எனக்கு சிறுவயது முதல் இயக்குனராக வேண்டும் ஆசை இருந்தது. அதற்காக வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு ஓடிவந்தேன்.
இதனையடுத்து, இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர முயற்சி செய்தேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு வேலையும் இல்லை. பொருளாதார தேவைக்காக நான் ஒரு ஓட்டலில் வேலை செய்தேன். காலையில் சினிமா வாய்ப்பை தேடி செல்வேன். மதியம் ஹோட்டலில் வேலை செய்வேன். அப்போதுதான் எனக்கு இயக்குனர் எஸ்.ஜெ சூர்யாவின் பழக்கம் கிடைத்தது.
இதனையடுத்து, வைரமுத்துவிடம் வேலை பார்த்தேன். இதன் பின்பு, இயக்குனர்கள் வசந்த், மணிரத்னம், எஸ்.ஜெ சூர்யா ஆகியோருடன் உதவி இயக்குனராக வேலை செய்தேன். இதன் பின்பு தான் நான் கண்ணும் கண்ணும், புலிவால் என 2 படங்களையும் இயக்கினேன் என்று மனம் திறந்து பேசினார்.