கொரோனா நோய்தொற்று பரவிவரும் காரணத்தினால் பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இன்னும் கொரோனா முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள், சென்னையிலுள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உண்டான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது :
பள்ளிகள் திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உடல் நலனும், குழந்தைகளின் உயிரும் மிகவும் முக்கியமானது. அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையதே என்றும் இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் பள்ளிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் அரசு எந்தவித சுணக்கமும் காட்டக்கூடாது என்றும் முதன்மை கல்வி அலுவலக கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் மாணவர்களின் கல்வி பயிலும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் முறையாக நடந்து வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது அவர்களை கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.