டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!
கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த (2021ஆம்) ஆண்டில், அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து இந்த (2022ஆம்) ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. 2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் 2022ஆம் ஆண்டு அங்கேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த தொடர், வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 13ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் 22-ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் விளையாடிய அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றின் முதல் போட்டியில் விளையாடுகின்றன. அதை தொடர்ந்து அக்டோபர் 23-ல் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. இறுதிப் போட்டியானது நவம்பர் 13ம் தேதி நடைபெற இருக்கிறது.