மீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!

Photo of author

By Parthipan K

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணையே ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை என்றும் புகழ் பெற்றிருக்கிறது. இதுவரை 4 முறை மட்டுமே தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 5வது முறையாக மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.

கேரளாவில் இருக்கும் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 167.68 மீட்டர் உயரத்தில் 72 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு  பிரம்மாண்டமனது இந்த இடுக்கி அணை. இந்த அணையின் கட்டுமானப்பணியானது 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1973ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த அணை 839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட அணையாகும்.

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த இடுக்கி அணையின் நீர் முழு கொள்ளளவு 2403 அடியாகும். இன்று காலை 10 மணியளவில் அணையில் 2340.89 அடி நீர் இருப்பதாகவும், அணைக்கு 500 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அல்லது நாளைக்குள் இடுக்கி அணை முழுவதும் நிரம்பிவிடும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

இடுக்கி அணை இதுவரை 1981, 1992, 1996 மற்றும் 2018 என 4 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் தற்போது 5வது முறையாக அது தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது.

கேரள மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த  அணையிலிருந்து வெளியேறும் நீரை விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் அமைந்துள்ள நீர்மின்நிலையத்தில் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாள் முதல் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அரபிக் கடலில் சென்று கலக்கிறது.

மேலும், இந்த அணைக்கு பொதுமக்கள் வந்து செல்வதை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஓணம் மற்றும் புத்தாண்டு தினங்களில் மட்டுமே இடுக்கி அணை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். கடந்த ஆண்டு முதல் இடுக்கி அணை பார்வையாளர்களுக்காக ஒரு மாதம் மட்டும் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.