சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. கட்சியிலும் நுழைய முடியாது என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதில் சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவிலோ, தமிழக அரசியலிலோ எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலாவால் இனி அதிமுக கட்சிக்குள் நுழையமுடியாது என்றும், தன்னை பொறுத்தவரை சசிகலா என்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் மட்டுமே தான் எனவும் தெரிவித்திருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக உள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன.
அவரது வருகைக்கு பிறகான அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில் அதனை திடமாக மறுப்பதுடன் அதற்கான வாய்ப்பு துளியும் இல்லை என அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினரான கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது என்றும், இது பற்றி தலைமை தான் முடிவெடுக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும், தான் ஒரு மக்களால் தேர்வு செய்யப்படாமல் மாநிலங்களவை மூலம் எம்.பி.யாகி உள்ளதால் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவும் இல்லை, அதை நான் கேட்கப் போவதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “அதிமுகவில் கட்சித் தலைமை மற்றும் கட்சியில் பிளவு குறித்த பேச்சிற்கே இனி இடமிருக்காது. சசிகலாவை நாங்கள் ஒதுக்கியது ஒதுக்கியது தான்.
குற்றவாளியான அவரை இனி மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வாய்ப்பே இல்லை” எனவும் தெரிவித்திருக்கிறார்.
“தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு சசிகலா மீது ஏன் பரிவு காட்ட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அமமுக-அதிமுக இணைப்பு என்பது ஒரு போதும் நடைபெறாது” எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.