அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும்
1000 ரூபாய் இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி கிடக்க வேண்டும் என தலைகனத்துடன் பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஹெச். ராஜா அவர்கள் இது குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது :-
திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும் என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அகங்காரத்தோடு பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் மக்கள் மூன்று வேளையும் உணவு உண்ணுகிறார்கள் மஹாராஷ்ட்ரா உள்பட மற்ற மாநிலங்களில் மக்கள் ஒருவேளை தான் உணவு உண்ணுகிறார்கள் என்று உண்மைக்கு மாறான பொய்யான தகவலை பொதுவெளியில் பேசி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், உண்மை என்னவெனில், பசியும் பட்டினியும் இல்லாத பாரதத்தை காணவேண்டும் என்கிற உன்னதமான நோக்கத்தோடு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் என்கிற பெயரில் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தான் இந்தத் திட்டத்தினை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் மானியமாக வழங்கி வருகிறார். அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இலவசமாக வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிற உணவுப் பொருட்கள் அனைத்தும் மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிற பொருட்கள் தான் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
உண்மை நிலையை மறைத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திமுக ஆட்சி கொடுக்கும் ரூ.1000/- பணத்தில் தான் தமிழக மக்கள் பசியாறுகிறார்கள் என்று பேசி இருப்பது திமுகவின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது என்றும், திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டு வருகிற ரூ.1000/- மகளிர் உரிமைத் தொகையை வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என திமுக அரசே பல பெயர்களில் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து கட்டண உயர்வு மூலம் பலமடங்கு திரும்ப வசூலித்து விடுகிறது என்றும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இவை மட்டுமின்றி திமுக அரசு குறித்து இன்னும் சில விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். அவை பின்வருமாறு :-
திருடர்கள் வழிப்பறி செய்வது போல இந்த திராவிடர்கள் ஆட்சியாளர்கள் என்கிற பெயரில் அனைத்து வரிகளையும் உயர்த்தி கட்டண உயர்வு என்கிற
பெயரில் மக்களிடமிருந்து “வரி”ப்பறி செய்து வருகிறார்கள். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போது 2021- 2022 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் தொகை ரூ.4,56,660.99/- கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.8,33, 361/- கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் பெயரில் திமுக அரசு ரூ.3,76, 700.81/- கோடி கடன் வாங்கி இருக்கிறது.அடுத்த மூன்று மாதங்களில் மேலும் ரூ.1.05/- லட்சம் கோடி கடன் வாங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது மட்டுமின்றி, திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரில் இருந்த கடன் ரூ.2,15,517/- கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.3, 70,026/- (வருகிற 2025 மார்ச் மாதம் வரும் போது தமிழகத்தின் மொத்த கடன்தொகை அளவின் விகிதாச்சார அடிப்படையில்) உயர்த்தியுள்ளதே திமுக அரசு. அதுவும் மூன்றே ஆண்டுகளில் ரூ.1,54,509/- கடனை கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் சுமக்க வைத்திருக்கிறதே அதற்கு பொறுப்பேற்க வேண்டியது திமுக தானே அதுகுறித்து திமுக தலைவர்கள் பேசத்தயாரா? தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கு பதிலளிப்பாரா?” என சில கேள்விகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பி இருக்கிறார் ஹெச் ராஜா அவர்கள்.