10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

நமது இந்திய அரசு கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்து நாணயங்களை அச்சிட்டு வருகிறது. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 ஆகியவை தற்பொழுது புழகத்தில் உள்ளன.

இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் , நொய்டா உள்ளிட்ட காசாலைகளில் தயாரிக்கப்படுகிறது.

அவ்வப்போது புதிய நாணயங்களை வெளியிட்டு வரும் இந்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த 10 ரூபாய் நாணயத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது. அதேபோல் மேலும் புதிய டிசைன்களில் 10 ரூபாய் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு இந்திய அரசு மக்கள் புழக்கத்திற்கு விட்டு வருகிறது.

ஆனால் 10 ரூபாய் நாணயம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போது கிடைத்த வரவேற்பு அதன் பின் குறையத் தொடங்கியது. இந்த 10 ரூபாய் நாணயம் போலியானது, இந்த நாணயம் செல்லாது என்று வதந்தி பரப்பப்பட்டு வந்ததால் இதை மக்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள கடைக்காரர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களில் மறுத்து வந்தனர்.

இதனால் 10 ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதை மாற்ற பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயத்தின் நன்பகத் தன்மை குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் அதை வாங்கிக் கொள்ளவும், வைத்துக் கொள்ளவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு உரியத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதாவது நம் இந்திய அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தாலோ, பெற மறுத்தாலோ சட்டப்படி குற்றமாகும் எனவும், அவ்வாறு மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ, பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் மீண்டும் 10 ரூபாய் நாணயத்தை மக்கள், வியாபாரிகள் தயக்கமின்றி பயன்படுத்துவார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.