இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி… குவியும் வாழ்த்துகள்
இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ராஜ்யசபா எம்.பி. பதவியில் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கலை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்தவர்களுக்கு ஜனாதிபதி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இதுபோல ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பல மொழி சினிமாக்களில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ள அவர் தனது 80 ஆவது வயதில் தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டில் கச்சேரி செய்ய சென்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக இந்திய பிரதமர் மோடி சம்மந்தமான ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்போது மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதி இருந்தது சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் இளையராஜா.