கஞ்சாவை ஒழிக்க திமுக கவுன்சிலர் போராட்டம்! அவரது மகனே கஞ்சா விற்று கைதான அதிர்ச்சி சம்பவம்.!!
கஞ்சாவிற்கு எதிராக திமுக கட்சியை சேர்ந்த தாய் போராட்டம் நடத்திய நிலையில் திமுக இளைஞரணியில் இருக்கும் அவரது மகன் பிரவீன் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதி திமுக கட்சியின் ஒன்றிய கவுன்சிலராக செல்வி ஆரோக்கியாமேரி பதவி வகித்து வருகிறார். இவர் சில வாரங்களுக்கு முன்பு சமயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும், அதனை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று அப்பகுதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் நேற்று இளைஞர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், கஞ்சா விற்பனை நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் ரோந்து பணியின் போது குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்தார். அப்போது திமுக கவுன்சிலர் செல்வி ஆரோக்கியாமேரியின் மகனான பிரவீன் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி பணமோசடி செய்து அவர்களின் பணத்தை அபகரித்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் மேலும் பல குற்றச் சம்பவங்களில் பிரவீன் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக ஒன்றிய கவுன்சிலராக தாய் கஞ்சாவுக்கு எதிராக போராடியதும், திமுக கட்சியில் இளைஞரணி நிர்வாகியாக மகன் பணியாற்றி கொண்டே கஞ்சா விற்பனை செய்து கைதான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.