தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளவர் “நடிகர் அல்லு அர்ஜுன்”. பழமொழிகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே குவித்து வைத்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “புஷ்பா 2 – தி ரூல்” என்னும் திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் பகத் பாசில், சுனில் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பட ரிலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் பிரமோஷன்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் சமீபமாக புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனர் சுகுமார், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுனின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதில், “இந்த நாள் எனக்கு வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். 20 வருடங்களாக நான் சினிமாவில் நடித்து வருகிறேன். பல படங்களுக்குப் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். குறிப்பாக, புஷ்பா பட முதல் பாகத்தின் பிரமோஷனுக்கு உலக அளவில் சென்றுள்ளேன். ஆனால் எங்கு சென்றாலும் சென்னையில் கிடைக்கும் உணர்வு எனக்கு எங்கேயும் கிடைத்ததில்லை.
நான் சென்னையில் இருந்துதான் என் சினிமா பயணத்தைத் தொடங்கினேன். ஆரம்ப காலகட்டத்தில் சென்னையில்தான் இருந்தேன். நான் சாதிக்கும் ஒவ்வொரு பெயரும் என்னுடைய மண்ணுக்குதான் சொந்தம். நான் எங்கு போனாலும் நான் ஒரு சாதாரண சென்னை டி நகர் பையன் தான் என்று பெருமையாகக் கூறிக் கொள்வேன்.
இங்கு வந்திருக்கும் பெரும்பாலானோர் தெலுங்கு பேசுபவர்களாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் நான் தமிழில்தான் பேசுவேன். காரணம், நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ அந்த மொழியில் தான் பேச வேண்டும்” என்று கூறியுள்ளார். அவரின் பேச்சுக்குப் பல பாராட்டுகள் குவிந்து வருகின்றன.