தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!!

0
145

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!!

டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. வாகன பெருக்கத்தின் காரணமாகவும், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தேவையற்ற கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதாலும் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் டெல்லியில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே டெல்லி மாநில அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

காற்று தரக் குறியீடு அளவு தொடர்ந்து 300க்கும் மேல் பதிவாகி காற்று மாசடைந்து  வருவதன் காரணமாக தலைநகர் டெல்லியில் வசித்து வரும் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் பெய்த மழை காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக அங்கு காற்று மாசு சற்று குறைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 339 என்ற அளவில் மிக மோசமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக்குறியீடு 258 ஆக குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியைச் சுற்றியுள்ள பாரிதாபாத், நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு முறையே 219, 252 மற்றும் 224 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வரும் 9 ஆம் தேதிக்குப் பிறகு வெப்பநிலை மாற்றம் மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!
Next articleகாற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!