10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் அச்ச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த ஆண்டு திறக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்றின் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து இந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அன்பில் மகேஷ் கூறியிருந்தார். எனவே பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை பொதுதேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் விரைவில் அவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் பொதுதேர்வுக்கு குறுகிய காலமே இருப்பதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி முதல் கட்ட திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து மார்ச் 28ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளது.

மே மாதம் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், தேர்வுக்கான கால அட்டவணை இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.