உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூரில் தங்கி இருந்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று வெகுநேரம் காத்திருந்து கடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சுங்க கட்டணங்களை நிறுத்துமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்பதால் காலதாமதத்தோடு வெளியேற்றமும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாநில எல்லைகளில் உள்ள சுங்க கட்டணங்களை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறையும் என்று வணிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.