பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! கனமழையால் இந்த ரயில்கள் ரத்து!!
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் போக்குவரத்து நெல்லை மாவட்டத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் புயலின் காரணமாக கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது தான் வெள்ளம் ஓரளவு வடிந்த நிலையில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரத் தொடங்கினர்.
இந்த பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வராத நிலையில் அடுத்ததாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பயங்கர கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதிலும் கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. திருச்செந்தூர், காயல்பட்டினம் மழை நீரால் தத்தளித்தன.
திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 800 பயணிகளுடன் ஸ்ரீ வைகுண்டத்தில் வெள்ளப்பெருக்கால் நிறுத்தப்பட்டது. மேலும் கனமழை பாதிப்பால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 23 ரயில் சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் நெல்லை – செங்கோட்டை, நெல்லை- நாகர்கோவில், ஆகிய முன்பதிவு இல்லாத ரயில்கள் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை- தூத்துக்குடி, திருச்சி- திருவனந்தபுரம், செங்கோட்டை -நெல்லை, திருச்செந்தூர்- எழும்பூர், திருச்செந்தூர்- வாஞ்சி மணியாச்சி, உட்பட 23 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.