குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு இருப்பதால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 48 லட்சம் அபராத தொகையை கைவிட இயலாது என்று வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அதிரடியாக தெரிவித்திருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சென்ற 2017 ஆம் வருடம் சிறைக்குச் சென்றார் சசிகலா சென்ற ஜனவரி மாதம் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்னை திரும்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய பின்னரே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் சென்ற 1994ஆம் ஆண்டு மற்றும் 1995ஆம் ஆண்டு வரை வருமான வரி செலுத்த வில்லை என்று தெரிவித்து வருமான வரித்துறை சசிகலாவுக்கு ரூபாய் 48 லட்சம் அபராதத் தொகையை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
சசிகலா மேல் முறையீடு செய்யாத காரணத்தால், வருமான வரி செலுத்தும் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு கோடிக்கு குறைவாக இருந்த காரணத்தால், நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டதை போல சசிகலாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வருமானவரித்துறை குற்ற வழக்கில் சசிகலா தண்டனை பெற்றிருப்பதால் அந்த அபராதத் தொகை விட இயலாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.